Pages

Wednesday, January 29, 2014

காசநோய் (சயரோகம், TB) என்றால் என்ன? அதன் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?


இது மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis ) எனப்படும் ஒருவகைப் பக்ரீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது ஒரு பரம்பரை நோயல்ல. Tuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். இந் நோய்க்கிருமிகள் பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது.

உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள். காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.

காசநோயின் அறிகுறிகள்
▪ தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்.
▪ சளியுடன் இரத்தம் வெளியேறல்
▪ நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோயறிகுறிகளும் காணப்படும்.
▪ இரவு நேரக் காய்ச்சல்.
▪ உடல் நிறை குறைவடைதல்
▪ உணவில் விரும்பமின்மை
▪ இரவு நேரத்தில் வியர்த்தல்
▪ களைப்பாகக் காணப்படல்

காசநோய்க் கிருமி

பக்ரீரியா (Mycobacterium tuberculosis) கலமென்சவ்வில் 200இற்கு மேற்பட்ட பிறபொருள் பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதனாலேயே இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் கடினமாக உள்ளது. நுணுக்குக் காட்டியில் கிருமிகள் மெல்லிய நீண்ட வளைவாகத் தனித்தனியே அல்லது கூட்டமாகக்காணப்படும். பக்ரீறியாவின் கலச்சுவர் அதிக கொழுப்பைக்கொண்டது.
நுணுக்கு காட்டி மூலம் பார்க்கையில் செந்நிறமாக இருக்கும்.

காசநோய் – வரலாறு
காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. சுமார் 10000 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டுள்ளது. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.

இன் நோயை ஏற்படுத்தும் நோய்க்கிரிமியை றொபேட்கொச் என்பவரால் 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது.

உலக நாடுகளில் காசநோய்த் தாக்கம்
உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் தாக்கபட்டுள்ளனர்  இதில் 10மில்லியன் மக்களிற்குமேல் சளியில் கிருமி காணப்படுகின்றது. உலகில் காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்தில் வசிக்கின்றனர்.  AIDS நோயாளிகளுக்கு காசநோய் பரம்பல் அதிகம் உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் காசநோய் பரவி வருகின்றது.

தென்கிழக்கு ஆசியாவில் காசநோய்த்தாக்கம் வங்களாதேசம், இந்தியா, பூட்டான், வடகொரியா, இந்தேனேசியா, மாலைதீவு, மியாமார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளிலுள்ளது. யுத்தத்தினால் சீர்குலைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் MDR-TB பரம்பல் அதிகம் உள்ளது.

இலங்கையில் காசநோய்
இலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்  இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள். ஆண்டுதோறும் 9000 காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள். இலங்கையில் காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர். கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு என்பதால் காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது.

காசநோய் உள்ளதா என்பதை அறிவது எப்படி?

3 கிழமைகளுக்கு மேல் தொடர்ச்சியான இருமல்  
மாலை நேரக் காய்ச்சல்  
உடல் நிறையிழப்பு  
இருமும் போது இரத்தம் வெளியேறல்   
உணவில் விருப்பமின்மை   
உறவினர் ஒருவருக்கு காசநோய் இருந்தால்   
நண்பர்களுக்கு காசநோய் இருந்தால்   
சுவாசிப்பதில் சிரமம்   
இரவில் வியர்த்தல்   
நெஞ்சு நோவு   
உடல் களைப்பு   
சலரோக நோய் இருத்தல்   
மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையில் சளிப் பரிசோதனையை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.
காசநோய் பரவும் விதம்
▪ காசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது இருப்பதனால்,
▪ இருமும் போதும்
▪ தும்மும் போதும்
▪ கதைக்கும் போதும்
▪ எச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.

ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது. எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.

காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்

▪ காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்
▪ எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
▪ புகைப்பிடிப்பவர்கள்.
▪ போசாக்கு குறைபாடு உடையோர்.
▪ சனநெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள்.
▪ காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
▪ மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.

காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்
1.சளிப் பரிசோதனை
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில் மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.

சளியில் 105/ml என கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு பிடிக்க முடியும்.

2. ஏனைய முறைகள்
a).வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல்.
b). தோற் சோதனை (மாண்டு பரிசோதனை)

3. CXR நெஞ்சு எக்ஸ்கதிர்படம்
4. இரத்தப்பரிசோதனை

காசநோய்க்கான சிகிச்சை - சிகிச்சை அளிப்பதன் நோக்கங்கள்

காசநோயாளியை பூரணமாகக் குணமாக்குதல்.
காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாத்தல்.
சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல்
காச நோய் மீள ஏற்படுவதைத் தடுத்தல்.
காசநோய்க்கிருமிகள் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை பெறுவதைத் தடுத்தல்.

இவை குறுகிய காலத்துக்கு (பொதுவாக 6 மாதங்களுக்கு) ஒழுங்காக பூரணமாக மருந்தை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அடையப் படுகிறது. இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலும், மார்பு நோய் சிகிச்சை நிலையங்களிலும் காசநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

காசநோய்க்கான சிகிச்சை  வகை -1
ஆரம்பத்தில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்சிகிச்சை.

a) ஆரம்ப அவத்தை (Intensive Phase)
இக் காலப்பகுதியில் நோய்க்கிருமிகள் விரைவாகக் கொல்லப்படும். நோயாளி எறத்தாழ இரண்டு வாரங்களில் ஏனையோருக்கு தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்படுவதுடன் நோய்க்கான அறிகுறிகளும் குணமடையும்.
இச் சிகிச்சையின் போது பின்வரும் மருந்துகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.
றைபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட் ( Isoniazid)
பைறசினமைட் (Pyrazinamide)
எதம்பியுட்டோல் (Etambutol)

b)Continuation phase
தற்போது நான்கு வில்லைகளும் ஒன்றாக்கப்பட்ட தனி வில்லையாக உள்ளது. தொடர் அவத்தை இக்காலப் பகுதியில் உடலில் எஞ்சியுள்ள கிருமிகள் அழிக்கப்படும். றைபாம்பிசின், ஐசோனியாசிட் என்பன நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.

காசநோய்க்கான சிகிச்சை  வகை -2
இச் சிகிச்சை மீளவும் காசநோய் வருபவர்களுக்கும், வகை 1 சிகிச்சை பயனளிகாதோருக்கும் சிகிச்சையினை முறையாகப் பெறாதோருக்கும் வழங்கப்படும்.

இதன்போது ஆரம்ப அவத்தையின் நான்கு மருந்துகளுடன் ஸ்ரெப்ரோமைசின் (Streptomycin) எனப்படும் ஊசியும் முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.அடுத்த ஒரு மாதத்திற்கு நான்கு மருந்துகள் வழங்கப்படும்.

இறுதி ஐந்து மாதங்களுக்கு தொடர் அவத்தையின் இரண்டு மருந்துகளுடன் எதம்பியுட்டோல் வழங்கப்படும். மொத்தமாக எட்டு மாதங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

காசநோயுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணல்
பாதிக்கப்படும் அங்கம் நோய் ஏற்பட எடுக்கும் காலம்
நுரையீரல் 3 - 7 மாதம்
நுரையீரல் சுற்றுச் சவ்வு 6 - 7 மாதம்
மூளை 1 - 3 மாதம்
என்பு 1 - 3 வருடம்
சிறுநீரகம் 5 - 7 வருடம்

உள்வட்டம் :

ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒரே அறையில் வேலைசெய்பவர்கள் சளிப்பரிசொதனை செய்தல் அவசியம்.

வெளிவட்டம் :
அயல் வீட்டில் உள்ளோர் சிலவேளைகளில் சளிப்பரிசோதனை செய்தல் அவசியம் சளிப்பரிசோதனை செய்யும் போது, BMI கணிக்க வேண்டும் BMI 18 விடக்குறைவாயின் காசநோய் தொற்றல் நிகழ்வு அதிகம்.

BCG தடுப்பு மருந்து ஏற்றல்
BCG தடுப்பு மருந்து குழந்தை பிறந்து 24 மணி நேரத்தினுள் சுகதேகியாகக் காணப்படுமிடத்து ஏற்றப்படுகின்றது.
காசநோய் ஏற்படுவதை இது முற்றாகத் தடை செய்யாது.
இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூளைக்காசம், மில்லியறி காசம் போன்ற காச நோயின் ஆபத்தான நிலைகளிலிருந்து பாதுகாக்கின்றது.

BCG போடப்படும் இடது கையின் மேற்புறத்தில் 6 மாதத்தில் அடையாளம் வராவிடின் மீளவும் தடுப்பு மருந்து ஏற்றல் அவசியம்.

மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள காசநோய் கிருமிகள்

MDR-TB - Rifampicin மருந்திற்கும் INAH மருந்திற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது.

XDR-TB - இது MDR TB இற்கு பாவிக்கும் மருந்துகளில் Amikacin, kanamyain Capreomycin இற்கும் ofloxacin, ciprofloxacin  இற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது.

உட்கொள்ளும் காசநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள் -
ஆபத்து அற்றவை
ஓங்காளம், உணவில் விருப்பம் இன்மை
சிறுநீர் செந்நிறமாக போதல்
மூட்டுக்களில் நோ
பாதத்தில் எரிவு

ஆபத்தானவை

தோலில் சொறி, எரிச்சல்
தலைச்சுற்று
காதுகேளாத நிலை
தோல், கண்கள் மஞ்சள் நிறமடைதல்
அடிக்கடிவாந்தி ஏற்படல்
கண்பார்வை குறிப்பாக நீலம், பச்சை வேறுபடுத்தல் கடினம்.

மருந்துகளை ஒழுங்காக எடுக்காதவிடத்து ஏற்படும் பாதிப்புக்கள்
சரியான அளவு மருந்துகளை உரிய காலத்திற்கு உபயோகிக்காது விடுமிடத்து மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்க்கிருமிகள் உருவாகும். இதனால் தனது குடும்பத்தினருக்கும் அயலவர்கள் நண்பர்களிற்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவார்.மருந்துகளை சரிவரப் பாவிக்காதவர்கள் 50% மானோர் 5 வருடங்களிற்குள் இறந்து விடுகின்றனர். இடைநடுவே சிகிச்சையினைக் கைவிடுபவர்களுக்கு மீளவும் சிகிச்சையினை ஆரம்பித்தல். பொருளாதார ரீதியிலும் உளரீதியிலும் சுமையாக அமையும்.

காசநோய்க் கிருமி பரவாது பாதுகாக்க
▪ நோயாளி இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் ▪ முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
▪ கண்ட கண்ட இடங்களில் துப்பக்கூடாது. நோயாளியின்
▪ சளியினை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
▪ நோயாளி ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டு பூரணமாக உரிய சிகிச்சை பெறப்பட வேண்டும்.
▪ நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
▪ போஷாக்கினை நல்ல நிலையில் பேணுவதுடன் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
▪குளிரூட்டப்பட்ட இடங்களில் காசநோய்கிருமிகள் அதிக நேரம் உயிர் வாழும். எனவே அவ்விடங்களிலும் சனக்கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் அதிகமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்

காசநோயும் கர்ப்பிணித் தாய்மாரும்
கற்பிணித்தாய்மாராக இருந்தாலும் காசநோய்க்கான மருந்தினை நோய் ஏற்படின் எடுக்க வேண்டும். பாலூட்டும் தாய்மாரும் நோய் ஏற்படின் காசநோய்க்கான மருந்தினை எடுப்பதுடன், குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் அவசியம்.

காசநோயும் எயிட்ஸ் நோயும்
எயிட்ஸ் நோயாளிகளில் 50% மானோர் காசநோய்த் தொற்றாலேயே இறக்கின்றனர். காசநோயாளிகளுக்கு எயிட்ஸ் நோய் வரும் சாத்தியம் இல்லை. ஆனால் எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசநோய் வரும் சாத்தியம் அதிகம் உண்டு எனவே காசநோயாளிகளை எயிட்ஸ் நோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தல் அவசியம். காசநோயாளிக்கு எயிட்ஸ் நோய் காணப்படும் போது முதலில் காசநோயிற்கே சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்

காசநோயாளிக்கு நாளொன்றுக்கான உணவு - அசைவ போசனம்
தானியம் - 200g
பருப்பு - 30g
கச்சான் - 30g
பால் - 1l
முட்டை - 1
இறைச்சி / மீன் - 50g
இலைக்கறி - 50g
காய்கறி - 50g
கரட் - 100g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 200g
எண்ணெய் - - 30g
சீனி - 80g
சைவ போசனம்;
தானியம் - 200g
பருப்பு - 50g
கச்சான் - 50g
பால் - 1.5 l
பச்சை இலைகள் - 50 g
காய்கறிகள் - 50g
கரட் - 50g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 100g
தாவர எண்ணைய்; - - 30g
சீனி - 80g


குறுகியகால நேரடிக் கண்காணிப்பிலான சிகிச்சை (DOTS)

மருந்துகளை ஒழுங்காக உள்ளெடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளியதொரு முறையாகும்.

இம்முறையில் நோயாளி தன் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு தினமும் சென்று அங்கு உள்ள சுகாதார உத்தியோகத்தர் முன்னிலையில் மருந்துகளை உள்ளெடுப்பார்.

தினமும் குளிசைகள் உள்ளெடுப்பது பதிவட்டையில் அடையாளப்படுத்தப்படும். நோயாளி சிகிச்சைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் உடனடியாக மீளவும் சிகிச்சைக்கு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காசநோய் தொடர்பான காரணிகள்
நோய் பற்றிய அறியாமையே சமூகவடுவிற்கான பிரதான காரணம். காசநோயினை முற்றாக்கக் குணப்படுத்தலாம்.
காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல என்பதை அறிதல் வேண்டும்.
மருந்துகள் எடுப்பதால் நோய் தொற்றும் தன்மை இரண்டு கிழமைகளில் முற்றாக இல்லாது போகும்.
தொடர்ச்சியாக 3 கிழமைகளுக்கு மேல் இருமல் இருப்போர் சளிப்பரிசோதனைக்கு முன்வரல் வேண்டும்

No comments:

Post a Comment