Pages

Tuesday, January 28, 2014

கர்ப்பப்பை இறக்கம் ஏன்


பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப் பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.

இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்! குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது, 5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது.  குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.

கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.

பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.

கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். இறங்கிய கர்ப்பப்பையைத் தற்காலிகமாக மேலே தூக்கி வைக்க, பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘ஸ்லிங் ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப் பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.

குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.’’

No comments:

Post a Comment