Pages

Thursday, October 31, 2013

நீரழிவு ஒரு பூரண விளக்கம் .




நீரழிவு நோய் என்றால் என்ன?

குருதியில் உள்ள குழுக்கொஸின் (சீனியின்) அளவு சாதாரண அளவைவிட அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.
அதாவது ஒவ்வொருவரின் உடலின் செயற்பாட்டுக்கும் சக்தியை வழங்கும் மூலப்பொருளான குளுக்கோஸ் தேவையான அளவைவிட அதிகமாக ரத்தத்தில் காணப்படுதல் நீரழிவு நோய் எனப்படுகிறது.

என்ன காரணத்தால் நீரழிவு நோய் ஏற்படுகிறது?

எமது உடலிலே சீனியின் அளவை வைத்துக்கொள்ளுவதற்கும் , சீனியை (குளுக்கோசை) ரத்தத்திலிருந்து காலங்களுக்குள் அனுப்புவதற்கும் 
இன்சுலின் எனப்படும் ஹார்மோன் (Hormone) உதவுகிறது.
இந்த இன்சுலினின் அளவு குறைவதால் அல்லது இன்சுலினின் செயற்பாடு குறைவதால் குருதியில் இருந்து சீனி கலங்களுக்குள் செல்ல முடியாமல் போவதால் ரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்து நீரழிவு உருவாகிறது.

அதாவது இன்சுலின் குறைபாடே நீரழிவுக்கான அடிப்படைக் காரணமாகும்.

இன்சுலின் குறைபாடு எப்படி ஏற்படுகிறது?

இன்சுலின் குறைபாடு இரண்டு விதமாக ஏற்படலாம்.
இன்சுலின் உற்பத்தி குறைதல் .அதாவது இன்சுலினை உற்பத்தி செய்கின்ற உறுப்பான சதையி(pancrease)  போதியளவு இன்சுலினை உற்பத்தி செய்யாமல் போதல்.
அல்லது சதையி சரியான அளவிலே இன்சுலினை உற்பத்தி செய்தாலும் அவை கலங்களிலே சரியாக தொழிற்பட முடியாமல் போதல்.

நீரழிவு நோயின் வகைகள் ?

முதலாவது வகை நீரழிவு(Type1)  - 
இது இன்சுலினை உற்பத்தி செய்யும் சதையி பாதிக்கப்படுவதால் போதியளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் ஏற்படுவது.
சிறு குழந்தைகளில் ஏற்படும் நீரழிவு இந்த வகையானதாகும்.
இதற்கு மருந்தாக இன்சுலின் ஊசி வாழ்நாள் முழுவதும் ஏற்றப்பட வேண்டும். 
இன்சுலின் ஊசி தவிர வாய் வழி மருந்துகள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை.


இரண்டாவது வகை நீரழிவு (Type2) -
இது இன்சுலினின் தொழிற்பாடு குறைவதால் ஏற்படுவது.
அதாவது இன்சுலின் தேவையான அளவுக்கு இருந்தாலும் கூட அது சீனியை கலங்களுக்குள் செலுத்த முடியாமல் போவதால் ஏற்படுகிறது.
பெரியவர்களிலே ஏற்படுவது சாதாரணமாக இந்தவகையான நீரழிவாகும்.
இதற்கு ஆரம்ப காலத்தில் வாய்வழி மூலம் உட்கொள்ளப்படும் மாத்திரைகள் பாவிக்கப்படலாம்.
இவர்களுக்கும் இறுதி கட்டத்தில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.

கர்ப்பகால நீரழிவு - 
இது கர்ப்பகாத்தில் மட்டுமே ஏற்படும் நீரழிவாகும்.
குழந்தை பிறந்தவுடன் நீரழிவு நோய் தானாக மறைந்துவிடும
ஆனாலும் குழந்தை பிறக்கும் வரை இன்சுலின் தேவைப்படலாம்.

நீரழிவு பூரணமாக சுகப்படுத்தப்படலாமா?

இல்லை. நீரழிவு நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது.
ஆனாலும் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசிமூலம் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்படலாம்.

ஆகவே சில நாட்டு வைத்தியர்கள் நீரழிவினை பூரணமாக குணப்படுத்துவதாக கூறும் விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.


நீரழிவு நோய் உயிர் கொல்லி நோயா?

நீரழிவு நேரடியாக உயிரழப்புக்களை ஏற்படுத்துவதில்லை.
ஆனாலும் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் படாவிட்டால் பல்வேறு வழிகள் மூலம் உயிரிழப்பினை ஏற்படுத்தலாம்.
ஆக பூரணமாக குணப்படுத்த முடியா விட்டாலும் வைத்திய ஆலோசனைப்படி இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நீண்ட நாள் சுகதேகியாக வாழ முடியும்.


எவ்வாறான வழிகளிலே இது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்?

நீரழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் படாவிட்டால் இது உடம்பில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
இது தலை முடி தொடக்கம் கால் விரல் நகம் வரை பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான பாதிப்புக்களாவன

1.மாரடைப்புக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்
2.பாரிசவாதம் (stroke) ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்
3.கண் பார்வை அற்றுப் போகலாம்
4.சிறுநீரகம் (kidney ) செயழ் இழந்து போகலாம்
5.நரம்புகள் செயல் இழப்பதால் கால் கைகளில் உணர்ச்சி குறையலாம்.
6.உணர்ச்சி குறைவதால் கால்களில் காயங்கள் ஏற்பட்டு மோசமடைந்து     காலை அகற்றவேண்டி ஏற்படலாம்
7.உடலுறவில் பாதிப்பு ஏற்படலாம்
8.சிறுநீர்த் தொற்று ஏற்படலாம் 

நீரழிவு நோயாளிகள் எல்லோரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விடயம் 

நீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் மருந்தானது அவர்களில் குருதியில் உள்ள சீனியின் அளவைக் குறைத்துக் கட்டுப் பாட்டிலே வைத்திருக்க உதவுகிறது.

எல்லோரும் அறிந்தபடி குருதியில் குளுக்கோஸின் ( சீனியின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.

குருதியில் சீனியின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சீனியின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது கைப்போ கிளைசீமியா(HYPOGLYCEMIA) எனப்படும்.

குறிப்பாக நீரழிவு மாத்திரை எடுக்கும் ஒருவர் அந்த வேளை சாப்பிடாமல் விட்டால் அல்லது அதிகமான அளவிலே மாத்திரைகளை எடுத்தால் சடுதியாக சீனியின் அளவு குறைந்து விடலாம்.

இவ்வாறு சீனியின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.....

நெஞ்சு படபடப்பு
வியர்த்தல்
மயக்கம்
தலைச்சுற்று
தலையிடி
உடலின் சில பகுதிகளில் உணர்வற்ற தன்மை
பார்வை மங்குதல்
வலிப்பு

ஆகவே நீங்கள் நீரழிவு மாத்திர எடுத்து சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சீனி கலந்த ஏதாவது உட கொள்ளுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில் நீரழிவு நோயாளிகள் சடுதியாக மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இன் இனிப்பு ஏதாவதை போடுவது அவரை பாதுகாக்கும்.

இவ்வாறான குணங்குறிகள் உண்மையில் சீனி குறைவானதால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத்து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார்.இவர்களை உடனடியாக (அவசரமாக ) வைத்திய சாலைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.

ஆனாலும் இனிப்பு போதியளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.


நீரழிவு நோயானது பூரணமாக குணப்படுத்தப்பட முடியாதது என்பதை மீண்டும் மீண்டும் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆகவே நீரழிவை பூரணமாக குணப்படுத்துகிறேன் என்று கூறும்  மாற்று வழி வைத்தியர்களுடன் சென்று 
ஏமாற வேண்டாம். .
ஆனாலும் நீரழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சீனியின் அளவை  சாதாரண அளவுகளில் கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து விதமான பாதிப்பையும் தவீர்த்து நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
நீரழிவு நோயாளி குறைந்தது மாதம் ஒரு தடவையாவது இரத்தத்தில் சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும் .மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு மாதமொருமுறை அளக்கும் போது சீனியின் அளவு
சடுதியாக அதிகரித்திருந்தால் அதற்கான காரணமாக,
  1. எடுக்கின்ற மாத்திரைகளின் அளவு போதாமை
  2. உணவிலே கட்டுப்பாடு இல்லாமை
  3. அண்மையில் ஏற்பட்ட காய்ச்சல் போன்ற உடலிற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் 
போன்ற பல வித காரணங்கள் இருக்கலாம்.இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியர் காரணத்தை ஆராய்ந்து மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பார்.
அதுதவீர நீரழிவு நோயாளிக்கு திடீரென ஏற்படும் சில உடற்பிரச்சினைகளின் போது சீனியின் அளவு சடுதியாக அதிகரிக்கும். உதாரணமாக ஏதாவது காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள், சத்திர சிகிச்சைக்கு உட்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் சீனியின் அளவு சடுதியாக அதிகரிப்பதால் அந்தப் பிரச்சினைக் காலத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப் பட வேண்டும். சிலவேளைகளில் தற்காலிகமாக இன்சுலின் ஊசி ஏற்ற வேண்டி வரலாம்.
ஆனாலும் அந்தப் பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் பழைய அளவு மாத்திரைகளுக்கு மாறி விடலாம். 
ஆகவே நீங்கள் நீரழிவு நோயாளி என்றால் மாதம் ஒருமுறை சீனியின் அளவை கட்டாயம் அளந்து பாருங்கள். அதேவேளை உங்கள் உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் (காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள் போன்றவை)
அந்த நேரத்திலும் உடனடியாக சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்  அந்தப் பிரச்சினைகள் காரணமாக சீனியின் அளவு சடுதியாக அதிகரித்து அந்தப் பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கலாம்.


No comments:

Post a Comment