Pages

Monday, March 31, 2014

அன்புமணியின் ஹெல்த் டிப்ஸ்


 
கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் வளாகத்தில் அமைந்திருக்கும் ஷட்டில் கோர்ட். தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஓடி ஆடி விளையாடிவிட்டு வியர்வை சொட்டச் சொட்ட வந்து அமர்ந்தார் அன்புமணி ராமதாஸ். முன்னாள் ஹெல்த் மினிஸ்டர்... இந்நாள் ஹெல்த் மாஸ்டர்!  
 ''வெற்றியைக் கண்டு வியந்ததும் இல்லை... தோல்வியைக் கண்டு துவண்டதும் இல்லை. இதுதான் என் மன ஆரோக்கியத்துக்கான மந்திரம்'' - அழகான புன்னகையுடன் ஆரம்பித்தது உரையாடல்.  
''ஆறரை வயதிலேயே ஹாஸ்டல் வாசம். ஏற்காடு மான்ட்ஃபோர்ட் பள்ளியில் படிச்சேன். அந்தப் பள்ளியில் விளையாட்டுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. தினமும் ஒரு மணி நேர விளையாட்டு கட்டாயம். சைவ சாப்பாடாக இருந்தாலும் சரி,  அசைவ சாப்பாடாக இருந்தாலும் சரி...  ருசியா செஞ்சு தருவாங்க. ஆனா, அப்போது இருந்தே நல்லா இருக்கேனு எதையுமே மூக்கு முட்டச் சாப்பிட மாட்டேன்.
தினமும் காலையில் சாண்ட்விச்தான் என் ப்ரேக்ஃபாஸ்ட். 11 மணிக்கு ஒரு டம்ளர் மோர் குடிப்பேன். மதிய உணவில் சாதம், பருப்பு, நெய், கீரை, காய்கறி நிச்சயம் இருக்கணும். வாரத்தில் ரெண்டு நாட்கள் அசைவம். தோல் பளபளன்னு இருக்கணும்கிறதுக்காக பழங்கள், ஜூஸ் சாப்பிடுவேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது மாதுளை ஜூஸ். வயித்தைக் குளுமையா வெச்சுக்க மாதுளைக்கு நிகர் மாதுளைதான். அல்சர் வராமலும் தடுக்கும். டீ, காபி குடிக்க மாட்டேன்.
பள்ளியில் படிக்கிற காலத்தில், உயரம் தாண்டுவது, நீளம் தாண்டுவது, வாலிபால், ஓட்டப் பந்தயம்னு அத்தனை விளையாட்டுகளிலும் ஒவ்வொரு வருஷமும் நான்தான் சாம்பியன். இப்பவும் தினமும் இரண்டு மணி நேரம் பேட்மிட்டன் விளையாடுறேன். நிறைய வியர்க்கும். கை, கால், உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மனசு எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கும்.
இப்பவெல்லாம் பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகணும்னாலே அழறாங்க. ஆனா, என் பள்ளிப் பருவம் ரொம்ப ஜாலியா இருந்தது. நான் இன்னிக்கும் ஆரோக்கியமா இருக்கிறதுக்கு என் பள்ளி வாழ்க்கை ஒரு முக்கியக் காரணம்.
பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரிக்குள் காலடிவெச்சப்ப, அங்கே இருந்த ப்ளே கிரவுண்டைப் பார்த்ததும் குதூகலமாயிட்டேன். ஆனா, எந்த நேரமும் அங்க யாருமே இருக்க மாட்டாங்க. மூணு மணியானால், எல்லாருமே லைப்ரரில போய் உட்காருவாங்க. சிலர் வீட்டுக்குப் போயிடுவாங்க. விளையாட்டுங்கிறதே இல்லாத கல்லூரி மைதானத்தைப் பார்க்க வியப்பா இருந்தது.
பொதுவாகவே, மாணவர்கள்கிட்ட நிறையப் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும்கிற எண்ணம்தான் இருக்கிறதே தவிர, உடம்பையும் மனசையும் பாதுகாக்கணும்கிற அக்கறை இல்லை. நீண்ட ஆயுளும் நிறைஞ்ச நிம்மதியும் வேணும்னா நல்லா விளையாடணும்.
மத்திய அமைச்சரா நான் இருந்தப்ப வேலைப் பளு அதிகம். என்னையே என்னால் கவனிச்சுக்க முடியாத நிலை. ஆறு அடி உயரத்தில் 99 கிலோ எடை இருந்தேன். ஆனால், இப்ப தினமும் உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி 10 கிலோ எடையைக் குறைச்சிருக்கேன். எடையைக் குறைச்சிட்டா மட்டும் போதாது. திரும்பவும் எடை ஏறாமல் பார்த்துக்கணும். அதுதான் முக்கியம். அது நம் உணவுக் கட்டுப்பாட்டிலும் விளையாட்டிலும்தான் இருக்கு.
யோகாவின் பிறப்பிடமே இந்தியாதான். இங்கே பிறந்த இந்தக் கலை வெளிநாட்டுக்குப் போய், பிரபலமாயிடுச்சு. அதை நாம இப்ப இங்க இறக்குமதி பண்றோம். நம் பாரம்பரியமான சித்தர் யோகாவில்,  இதயப் பிரச்னை, சர்க்கரை நோய், வயிறு தொடர்பான பிரச்னைகள்னு சகல நோய்களுக்கும் தீர்வு இருக்குன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. நான் சித்தர் யோகாவை முழுமையாக் கத்துக்கிட்டேன். தினமும் 10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி செய்வதால், சுவாசம் சீரா இருக்கு. 100 சதவிகிதம் உடல், மன நோய்க்கான தீர்வு யோகாவில் இருக்கு.
ஆரோக்கியம்கிறது வெறும் உடல் பராமரிப்பில் மட்டும் இல்லை. நிறைஞ்ச மனசும் முக்கியம். அதுக்கு குடும்பம், நண்பர்கள், உறவுகளோடு சுமுகமான சூழல் முக்கியம். எனக்கு நட்பு வட்டாரம் கடல் அளவு நீண்டு இருக்கு. நல்லது கெட்டதைப் பகிர்ந்துப்போம். என்னோட நிம்மதியான வாழ்க்கைக்கு நட்பும் ஒரு முக்கியமான காரணம். அதேபோல சொந்தபந்தங்கள்.
உறவுகள்னாலே கொண்டாட்டம்தான். என் குடும்ப உறவுகள் சுமார் 40 பேர் இருக்கோம். வருஷத்துக்கு ரெண்டு முறை  சுற்றுலா போவோம். இந்தச் சுற்றுலாவுக்கு  ஒருத்தர்கூட வராமல் இருக்கக் கூடாதுங்கிறது அப்பாவோட கட்டளை. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அந்த ஒரு வார காலமும் ஏகாந்தமா இருக்கும். புது உலகுக்குப் போயிட்டு வந்த புத்துணர்ச்சி முழு வருஷத்துக்கும் கிடைக்கும்.
எல்லாத்தையும்விட முக்கியம் குடும்பம். எனக்கு மூணு பெண் குழந்தைங்க. பாசமான மனைவி. அவங்களோட நான் இருக்கிற அத்தனை நேரமும் பொன்னானது. விளையாட்டு, பாட்டு, ஜோக்ஸ்னு ஏதாவது ஒரு டாப்பிக்கை எடுத்துக்கிட்டு  கலகலப்பா இருப்போம். எனக்கான எனர்ஜியே அவங்கதான். பெண் குழந்தைங்க அப்பாவைத்தான் பார்த்து வளரும்னு சொல்லுவாங்க. அவங்களைப் பார்த்தே நான் ஹெல்த்தியா இருக்கேன்!
ஒருவர் முழு ஆரோக்கியத்தோட இருக்கணும்னா... சிகரெட், குடி... இது இரண்டும் இருக்கக் கூடாது. ஆனால், இப்ப என்ன நடக்குது? உயிரைக் கொடுத்துப் படிக்கிறவங்க, படிச்சு முடிச்சதும் வேலை வேலைன்னு நாள் முழுதும் டென்ஷனாவே அலையுறாங்க.
டென்ஷனைப் போக்கிக்கொள்ள சிலர் குடி, சிகரெட்னு தஞ்சம் அடையறாங்க. அதனால் குடும்பத்துக்குள் எக்கச்சக்கப் பிரச்னை, மனநலப் பாதிப்பு, விரக்தின்னு வாழ்க்கையே நாசமாயிடுது. அதனாலதான் மது விற்பனைக்குத் தடை செய்யணும்னு சொல்றோம். உடற்பயிற்சிக்கும் விளையாட்டுக்கும் அதிக முன்னுரிமை தரணும். இதெல்லாம் அரசு மனசு வைச்சாதான் முடியும்'' - ஆதங்கமும் இளைய தலைமுறை மீதான அக்கறையும் கலந்து சொல்கிறார் அன்புமணி.
எடையைக் குறைக்க டாக்டர் அன்புமணி தரும் ஐந்து டிப்ஸ்...
 இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். அதுவும் அரை வயிறு மட்டும் சாப்பிடுவது நல்லது. இரவில் அரிசி உணவு வேண்டாம். இதைக் கடைப்பிடித்தாலே, ஒரே மாதத்தில் மூன்று கிலோ எடை குறைவது நிச்சயம். இது என் அனுபவ உண்மை.  
 வாரத்துக்கு ஐந்து நாட்கள் தினமும் இரண்டு மணி நேரம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுங்கள். கலோரி எரிக்கப்பட்டு, உடல் கச்சிதமாக இருக்கும்.
வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுக் கோலா குடிப்பது இன்றைய ஃபேஷனாகிவிட்டது. ஒரு காபியில் ஒன்றரை தேக்கரண்டி சர்க்கரைதான் சேர்க்கிறோம். ஒரு கோலா பாட்டிலில் 8 தேக்கரண்டி சர்க்கரை இருக்கிறது. எனவே, குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
 உணவுக் கட்டுப்பாடும் உரிய உடற்பயிற்சியும் மேற்கொண்டாலே உடல் எடை நிச்சயம் குறையும். சாப்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டாலே, உடல் கட்டுக்கோப்புக்கு வந்துவிடும். 

No comments:

Post a Comment