Pages

Sunday, March 30, 2014

பாதம் பத்திரம்

சிலர் ஷூவைக் கழற்றினாலே மூக்கைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு வாடை அடிக்கும். சாக்ஸில் இருந்து மட்டும் அல்ல... பாதங்களில் இருந்தே நாற்றம் கிளம்பும். கோட், சூட், டை என்று வெளிப்பார்வைக்குப் பந்தாவாக இருந்தால் மட்டும் போதுமா? எண் சாண் உடலைத் தாங்கும் பாதங்களும் சுத்தமாக இருக்க வேண்டாமா? பாதங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதன் மூலமே பல வியாதிகளில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு காலணிகளை அணியாமல் எலியின் சிறுநீரை மிதிப்பதால் லெப்டோபைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் வரக் கூடும். கால் சுத்தம்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை தோல் சிகிச்சை மருத்துவர் சரவணன் விரிவாகப் பேசினார். 
'வெளியில் சென்று வந்த பிறகு காலணிகளை வீட்டுக்கு வெளியிலேயே விட வேண்டும். சிலர் வாசல் கதவைத் திறந்து ஹாலுக்குள் காலணிகளை விடுகின்றனர். சிலர் அவசரத்தில் வெளியிலே செல்லப் பயன்படுத்தும் அதே காலணிகள் அணிந்துகொண்டு வீட்டுக்குள்ளும் போய்வருகிறார்கள். வீட்டுக்குள் எல்லாக் கிருமிகளையும் அழைத்து வந்து உட்காரவைப்பதற்குச் சமமான செயல் இது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரை எளிதில் நோய்கள் தொற்ற இதுவும் ஒரு காரணம்.
பல கிராமங்களில் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே கை கால்களைச் சுத்தம் செய்துவிட்டுத்தான் வீட்டுக்குள்ளேயே நுழைவார்கள். நகர வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை என்றாலும், வீட்டு வாசலுக்கு வெளியே காலணிகளை விடுவது நல்லது. அதைப் போலவே காலணிகளை விட்ட பிறகு கால்களை நன்கு கழுவி, ஈரம் போகத் துடைப்பதும் முக்கியம்.
காலணி அணியாமல் வெறும் கால்களுடன் தெருக்களில் நடப்பது இன்னும் பல நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். வீட்டில் இருக்கும் தரை விரிப்புகள் போன்றவற்றை அடிக்கடி துவைப்பதும் வேக்குவம் கிளீனர் மூலமும் கிருமிநாசினிகள் மூலமும் சுத்தப்படுத்துவதும் நல்லது. காலணிகளைக் கழுவுவதன் மூலம் 90% கிருமிகளை நீக்கிவிடலாம்.
இறுக்கமான ஷூக்களை நெடு நேரம் அணிந்திருப்பவர்களுக்கு 'அத்லெட் ஃபுட்’ (Athlete’s foot) என்ற தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சேற்றுப் புண் என்றும் சொல்வார்கள். இது 'டீனியா பெடிஸ்’ (Tinea pedis) என்ற ஒரு வகைப் பூஞ்சையினால் ஏற்படுவது. வியர்வைக் கசகசப்பும் வெதுவெதுப்பும் இருக்கும் உடற்பகுதிகளில் இவை நன்கு வளரும். வீட்டு வேலைகளுக்காகத் தண்ணீரில் அதிக நேரம் புழங்கும் பெண்களுக்கும், ஷூக்களை நீண்ட நேரம் அணிந்திருக்கும் ஆண்களுக்கும் கால் விரல் இடுக்களில் பூஞ்சை வளரத் தேவையான சூழல் நிலவும். அதனால், அங்கே தொற்று தோன்ற ஆரம்பித்துப் பிறகு கை, கால், தலை என்று உடலின் பல பகுதிகளுக்கும் பரவும். ஈரமான ஷூக்கள், சாக்ஸ்கள், பிளாஸ்டிக் ஷூக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினாலும் இந்தத் தொந்தரவு ஏற்படலாம். சாக்ஸ்களைத் துவைத்து நன்கு அலசாமல் காயவைத்தால் அதில் தங்கிவிடும் சோப் துகள்கள் வியர்வையில் ஊறும்போது தோலைப் பாதிக்கும். அழுக்குத் தண்ணீரில் நீண்ட நேரம் புழங்குபவர்களின் கால்களில் நீர்ச் சத்து வெளியேறி வெடிப்புகள் தோன்றக்கூடும். அதிக நேரம் ஷூக்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, சாக்ஸ்களைத் தினமும் மாற்றுவது போன்றவற்றால் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கலாம்.
பொதுவாக, பாதங்களைச் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல் இடுக்குகள் உலர்வாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஷூக்கள் காலுறைகள் உலர்வாகவும் சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதும் நல்லது. சோப் கலந்த வெதுவெதுப்பான நீரில் சுமார் 10 நிமிடங்கள் உங்களது பாதங்களை வைத்திருங்கள். இது உங்களது பாதத்தின் சருமத்தை மிருதுவாக்கி, நகங்களை சுத்தமாக வைத்திருக்கும். அதன் பிறகு, பாதத்தின் கரடுமுரடான திசுக்களை ப்யூமிக் கல் அல்லது எமரி ஷீட் கொண்டு மென்மையாக நீக்குங்கள். இப்படிச் செய்வதால் இறந்துபோன செல்களும் அப்புறப்படுத்தப்படும். நகத்துக்கும் சதைக்கும் இடையில் இருக்கும் அழுக்கையும் கவனமாக நீக்கிவிட வேண்டும். பாதங்களை அவ்வப்போது நீங்களே லேசாக மசாஜ் செய்துகொள்வது நல்லது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்துப் புத்துணர்வையும் அளிக்கும். சிலருக்குத் தோலால் செய்யப்பட்ட காலணிகள் அழற்சியை ஏற்படுத்தும். வேறு சிலருக்கு பிளாஸ்டிக் மற்றும் ரெக்ஸின் அழற்சியை ஏற்படுத்தலாம். அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, சரியான அளவுள்ள காலணியைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம். இப்படிப் பாதங்களுக்கு உரிய கவனம் அளித்தால், கால்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உடல் தூய்மைக்குமே அது வழிவகுக்கும்!''

No comments:

Post a Comment