Pages

Sunday, March 30, 2014

அபூர்வ பிரச்னை... அசத்திய டாக்டர்கள்!


பிரசவம் என்பது 'மறுபிறப்பு’க்குச் சமம் என்பார்கள். ஆனால், மருத்துவ உலகில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தினாலும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு உணர்வாலும் பிரசவம் குறித்த பயம் விலகி, இன்று அது சுகமான அனுபவமாக மாறிவிட்டது. 
இன்னொரு பக்கம் புதிது புதிதான நோய்களும், காரணம் இல்லாத அறிகுறிகளும் கர்ப்பிணிகளைத் தாக்கும்போது பலரும் தடுமாறிவிடுகின்றனர். சிவகாசியைச் சேர்ந்த தவமணி- லட்சுமணன் தம்பதிகள் இதற்கு ஓர் உதாரணம். கர்ப்பிணியான தவமணிக்கு வந்த பாதிப்பு, உலக அளவில் இதுவரை ஜப்பானைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு மட்டுமே வந்திருக்கிறது! இந்த வரிசையில் தவமணி மூன்றாவது நபர்.
எதையும் அலட்சியப்படுத்தாமல், உரிய நேரத்தில் எடுக்கும் சிகிச்சை நிச்சயம் தாய் - சேய் இருவரின் உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் என்பதற்கும் தவமணி சந்தித்த பிரசவ வேதனை சாட்சி! எமனுடன் போராடி ஜெயித்திருக்கும் தவமணி தான் பெற்ற குழந்தையைக் கொஞ்சியபடியே தான் மீண்டெழுந்த கதையைச் சொன்னார்.
''பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் ஆச்சு. உடனே, கர்ப்பமாயிட்டேன்.  எப்பவும் சுறுசுறுப்பா இருந்த என்னால, கர்ப்பமான நாள்லேர்ந்து எதைச் சாப்பிட்டாலும் வாந்தி, மயக்கம், தலைச்சுத்தல்னு நிறைய பிரச்னை. கர்ப்பமானாலே இப்படி வரும்னு சாதாரணமா இருந்திட்டோம். டாக்டரும், ஒரு சிலருக்கு இப்படித்தான் இருக்கும்னு சொல்லி மருந்து கொடுத்தாங்க. மூணு மாசம் ஆனபோது என்னால எழுந்து நடக்க முடியலை. உட்கார முடியலை. கண் பார்வை மங்க ஆரம்பிச்சிடுச்சு. பேச்சும் சரியா வரல. உடனே, டாக்டர்கிட்ட போனோம். சத்துக் குறைபாடுன்னு சொல்லிட்டு, மூளையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தாங்க. 'மூளையில் 3 இடத்துல பாதிப்பு இருக்கு, மதுரைக்குப் போய்தான் மருத்துவம் செஞ்சுக்கணும்’னு சொல்லிட்டாங்க. உடனே என்னை அழைச்சிகிட்டுப் போனாங்க. ஒரு மருத்துவக் குழுவே வந்து என்னென்னமோ டெஸ்ட் எடுத்தாங்க. ஹார்மோன் தொடர்பான ஏதோ பெரிய பிரச்னைன்னு சொன்னாங்க. பத்து நாள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகிட்டேன். அந்த சிகிச்சைதான் இன்னிக்கு என்னைத் திரும்பவும் நடமாடவிட்டிருக்கு. டாக்டர்கள் எடுத்திகிட்ட முழுமுயற்சியில்தான் என் செல்லம் எனக்குப் பத்திரமா கிடைச்சிருக்கு...'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
தவமணிக்குச் சிகிச்சை அளித்த, நாளமில்லா சுரப்பிப் பிரிவு மருத்துவர் ஆனந்த்குமார் அண்ணாமலையிடம் பேசினோம்.  
''எந்தச் சூழலில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாத மயக்க நிலையில்தான் தவமணி எங்களிடம் வந்தார். கண் பார்வை சீராக இல்லை. காட்சிகள் எல்லாமே அவருக்கு இரட்டையாகத் தெரிந்தன. நிற்கவோ, உட்காரவோ முடியாத நிலையில் இருந்தார். பேச்சு கோர்வையில்லாமல் இருந்தது. போதிய ஊட்டச்சத்து இல்லாமல் எடை குறைந்து காணப்பட்டார். தொடர் வாந்தியாலும் அவதிப்பட்டபடி இருந்தார். அவருக்குப் பல்வேறு பரிசோதனைளைச் செய்தோம்'' என்றவர், தவமணிக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்.  
''பொதுவாக எல்லாக் கர்ப்பிணிப் பெண்களுக்கும் 6 முதல் 8 வாரங்களில் அதிகமாகவும், 12 முதல் 16 வாரங்களில் குறைவாகவும் ஹெச்.சி.ஜி (Human chorionic gonadotropin) என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் அமைப்பு தைராய்டு ஹார்மோன் போலவே இருக்கும். வயிற்றில் குழந்தை பெரிதாக இருந்தாலோ, நஞ்சுக்கொடி பெரிதாக இருந்தாலோ ஹெச்.சி.ஜி ஹார்மோனின் வீரியம் அதிகமாக இருக்கும். தவமணிக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் ஹெச்.சி.ஜி ஹார்மோன் வீரியம் மிக அதிகமாக இருந்தது. தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகச் சுரக்க வைக்கும் தன்மை இந்த ஹார்மோனுக்கு உண்டு. தவமணிக்கு வந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணமே இந்த ஹெச்.சி.ஜி ஹார்மோன்தான்.
தொடர் வாந்தியை ஹைபெரிமிசிஸ் கிரவிடரம் (Hyperemesis gravidarum)  என்போம்.  நூறு கர்ப்பிணிகளில் இரண்டு பேருக்குத்தான் இந்தப் பாதிப்பு வரும். இந்தப் பிரச்னையால் உடலில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, பி1 சத்து ஆகியவை குறைந்துவிடும்.  இவை குறையும்போது, கீட்டோஅசிடோசிஸ் என்கிற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தவமணியின் உடலில் கலந்து மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.
நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதற்கு பி1 குறைபாடுதான் முக்கியக் காரணம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ததில், நரம்புகள் கோர்வை இல்லாமல் இருந்தன. இதற்கு வெர்னிகி என்செஃபாலோபதி (Wernicke’s encephalopathy)  என்று பெயர். கடைசியில் ஜெஸ்டேஷனல் ஹைபர் தைராய்டு பிரச்னையும் இருப்பதை கண்டுபிடித்தோம்.'' என்ற டாக்டர் ஆனந்த்குமார், சிகிச்சை அளித்த விவரத்தையும் சொன்னார்.
''பி1 குறைபாட்டிற்கான சிகிச்சைக்காக, தவமணிக்கு வீரியமிக்க வைட்டமின்கள் கொடுக்கவேண்டி இருந்தது. தைராய்டு சுரப்பதைக் கட்டுப்படுத்த மருந்து கொடுத்தோம். வாந்தி, மயக்கம், தடுமாற்றம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. நரம்பியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர் என ஒரு குழுவே அவரை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்பினார் தவமணி.  
அதன் பிறகு, 2.6 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ததில், மூளையின் அமைப்பு சரியானபடி இருந்தது. ஹெச்.சி.ஜி கூடினால் திரும்பவும் இந்தப் பாதிப்பு வரலாம். அடுத்து கர்ப்பம் தரித்தால் உடனே டாக்டரிடம் காட்டவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.  
ஓரிரு வாரங்கள் தாமதமாக அழைத்து வரப்பட்டிருந்தாலும், நிச்சயம் மூளை நரம்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். ரத்த அழுத்தம் அதிகரித்து, பிரசவமே பெரும் சிக்கலாகி இருக்கும். உரிய நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்.
தவமணிக்கு வந்த பாதிப்பு என்பது மிக மிக அரிதானது. 'ஹைபெரிமிசிஸ் கிராவிடரம், வெர்னிகி என்செஃபாலோபதி, ஜெஸ்டேஷனல் தைரொடாக்சிகோசிஸ்’ என்ற இந்த மூன்று பாதிப்புகளும் ஒன்று சேர்ந்து ஜப்பானில் இரண்டு பேருக்கு வந்திருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை தவமணிதான் முதலாவது என்று மருத்துவத் தகவல்கள் கூறுகின்றன.
ஆகையால் தவமணிக்கு வந்த இந்தப் பாதிப்பை நினைத்து, 'கர்ப்பிணிகள் வாந்தி எடுக்கும்போதெல்லாம், இந்த பாதிப்பு இருக்குமோ!?’ என்று பயப்படத் தேவை இல்லை. ஆனால், தொடர் வாந்தியுடன் பல்வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவேண்டியது அவசியம்'' என்றார் விளக்கமாக.
 பி1 அவசியம்!
பொதுவாக, பி1 (B1) சத்துக்குறைபாடு 100 பேரில் 0.8 முதல் 2.8 சதவிகிதம் நபர்களுக்குத்தான் இருக்கும். மது அருந்துபவர்களுக்கு 100 பேரில் 12.5 சதவிகிதம் நபர்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கும். ஒரு பெண்ணுக்கு 1 மி.கி. அளவுக்கு பி1 வைட்டமின் தேவை. கர்ப்ப காலத்தில் 1.4 மி.கி. தேவை. உண்ணும் உணவு செரிமானத்துக்கும், நரம்பு மண்டலம், இருதயத்துக்கும் பி1 வைட்டமின் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment